விரல் மொழியருக்கு வாழ்த்துக்கள்

லூயி பிரெய்ல் பார்வையற்றவர்கள் தொட்டு உணரும் புள்ளி எழுத்து வடிவங்களை உருவாக்கினார்.. அதனால்தான் அந்த எழுத்து வடிவங்கள் அவற்றை உருவாக்கிய லூயிப் ப்ரெய்ல்  பெயரிலேயே ப்ரெய்ல் எழுத்துக்கள் என்று இன்றளவும் குறிக்கப்படுகின்றன. 
. 6 புள்ளிகளைக் கொண்டு 63 வேறுபட்ட வடிவங்களை உருவாக்க முடியும். அந்த வடிவங்களை இணைத்து எழுத்துகளாக பயன்படுத்த முடியும். உலகின் எந்த மொழியையும்  ப்ரெய்ல் வாயிலாக எழுத முடியும். ப்ரெய்ல் எழுத்துக்களை புள்ளி எழுத்துகள், குமிழி எழுத்துக்கள் என்றெல்லாம் சொல்வதுண்டு. எழுத்துகளை விரல்களால் தொட்டு உணர முடியும் என்பதால் பிரெய்ல் எழுத்துக்களை விரல் மொழி என்றும் கூடச் சொல்லலாம். 
. நண்பர்கள் சக்திவேல்,  பாலகணேஷ் விரல் மொழியர் என்ற இணைய இதழை வெகு நாட்களாக நடத்தி வருகிறார்கள்.  நவீன இலக்கிய ஈடுபாடு கொண்டவர்கள். மனோகர் என்ற இன்னொரு நண்பரும் புத்தகப் புதையல், புத்தகப் பூங்கா என்ற வெவ்வேறு புலனக் குழுக்கள்  வாயிலாக பார்வையற்றவர்களிடையே வாசிப்புச்  செயல்பாட்டை ஊக்குவிக்கிறார். இப்போது இவர்கள்  மூன்று பேரும் சேர்ந்து ஒரு திட்டத்தை முன்னெடுக்கிறார்கள். 
ஆர்வமூடைய வாசகர்களிடமிருந்து 500 ரூபாய் வசூலிக்கிறார்கள். அவற்றைக் கொண்டு புத்தகங்கள் வாங்குகிறார்கள். அந்தப் புத்தகங்களை பணம் செலுத்திய உறுப்பினர்கள் பரிந்துரைக்கலாம். கிண்டில் உள்ளிட்ட எந்தத் தளத்திலும் கிடைக்காத அச்சு நூல்களை மட்டும் இவர்களே சென்று புத்தகக் கண்காட்சிகளில் வாங்குகிறார்கள். இவர்களும் 
 பார்வையற்றவர்கள் தான். 
 புத்தகங்களை மற்ற பார்வையற்றவர்கள் வாசிக்குமாறு நவீனத் தொழில்நுட்பத்தின் துணையால் மாற்றுகிறார்கள். அவற்றை விரல் மொழியர் நூல் திரட்டு என்ற புலனக்குழுவில் பகிர்கிறார்கள். அரசாங்கம் நினைத்தால் சில ஆணைகள் வழி நூல்கள் எல்லாத் தரப்பினரும் அணுகுமாறு வெளிவரச் செய்யலாம்.அமெரிக்கா போன்ற நாடுகளில் நூல்கள் எல்லோரும் அணுகும் வண்ணம் உருவாக்க வேண்டியது பதிப்பாளர்களின் கடமை.இப்படி பதிப்பாளர்களை கண்காணிக்க சட்டங்கள் இருக்கின்றன. இலட்சக்கணக்கான நூல்களைக் கொண்ட Bookshare.org என்ற நூலகம் பார்வையற்றவர்களுக்கு பெருந்தொண்டாற்றி வருகிறது. அரசாங்கம் செய்யத் தவறுவதை இங்கு தனிப்பட்ட ஆர்வலர்கள்/நிறுவனங்கள் முயன்று மேற்கொள்ள காண்கிறோம். நண்பர்கள் தாங்கள் வாங்கி வாசிப்புத் தொழில்நுட்பத்தின் துணையால் மேம்படுத்தும் நூல்களை யாருக்கும் விற்பதில்லை. நூல்களை முறையின்றி பகிர்ந்து கொள்ளும் whatsapp ,டெலிகிராம்  குழுக்களில் பகிர்வது கிடையாது.  எல்லா வகை காப்புரிமை விதிகளையும் கண்டிப்பாகப் பின்பற்றுவது என்ற உறுதியும்  சமூகப் பொறுப்பும் கொண்ட நண்பர்கள் இவர்கள். 
சக்திவேல் ஒரு கருவி வைத்திருக்கிறார். சுமார் நூறு பக்கங்களைக்கூட சில நிமிடங்களில் ஸ்கேன் செய்யும் கருவி அது. ஆர்வமுடைய பார்வையற்ற  நண்பர்களுக்கு புத்தகங்களை ஸ்கேன் செய்து கொடுக்கும் பணியை எந்தவித பிரதிபலனும் எதிர்பாராமல் சளைக்காமல் முன்னெடுக்கிறார்.  வாசிப்பவர்களின் தொடர் ஆதரவால் நான்கு சுற்றுக்களைக் கடந்து வெற்றிகரமாக தொடர்ந்து கொண்டிருக்கும் விரல்மொழியர் நூல் திரட்டு திட்டத்தில் இணைந்திருக்கிறேன். வாசிப்புச் சவால்களை பார்வையற்றவர்கள் கடக்க நல்ல முயற்சிகளை மேற்கொண்டு வரும் விரல் மொழியரின் உயர்ந்த நோக்கம் வெற்றி பெற வேண்டும். வாசிப்புப் பழக்கம் பார்வையற்ற சமுதாயத்தில் மேலும் பெருக வேண்டும். 
வாழ்த்துகள் நண்பர்களே! 

Comments

Popular posts from this blog

ஒரு மொழி பெயர்ப்பாளர் பிறந்திருக்கிறார்

இவருக்கு எத்தனை கரங்கள்?

தலையாலே தான் தருதலால்