அகராதி பிடிப்பவன்

சந்தேகம் வரும்போது அகராதியைப் பார்க்கலாம் அகராதியை மொத்தமாக படிப்பவர்களை பார்த்ததுண்டா? 
இந்தியக்கவிதையியல் தொடர்பான தேடலின் விளைவாக பேராசிரியர் மல்லேபுரம் வெங்கடேஷ்  தொகுத்த பாரதிய காவ்ய சாத்ர பரிபாஷே என்னும் அகராதி கிடைத்தது கர்நாடக சம்ஸ்கிருதப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற பேராசிரியர் மல்லேபுரம் வெங்கடேஷ் இந்த அகராதியைத்  தொகுத்துள்ளார்.  ஹம்பி கன்னடப் பல்கலைக்கழகத்தில் முதலில்  பணியாற்றியவர்.   வடமொழியில் உள்ள கவிதையியல் சார்ந்த சொற்களை தொகுத்து விளக்கும் அகராதி இது. 
ஒவ்வொரு கலைச் சொல்லையும் வரையறுத்து அதன் வரலாற்றை தொகுத்துரைத்து அது தொடர்பாக வாசிக்க வேண்டிய நூற்பகுதியையும் விளக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.  சான்றாக உன்மத்தம் என்ற ஓர் உணர்வு பற்றிப் பார்ப்போம்.  பரதர் தமது  நூலில் 33 மாறும் உணர்வுகளுள் ஒன்றாக  இதனைக் கருதுகிறார். 
 மது அருந்துவதால் ஏற்படும் உணர்வு உன் மத்தம் எனப்படுகிறது. இந்த  மதமதப்பு தற்காலிகமானது. எனவே தான் இது சஞ்சாரி பாவம், அல்லது வ்யபாசாரி பாவம் என்று அழைக்கப்படும் மாறும் உணர்வுகளில் ஒன்றாக பரதரால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இதன் விளைவுகளாக உறக்கம், பாடல், சிரிப்பு, பேச்சு, அழுகை ஆகிய 5 செயல்பாடுகள் ஒருவரிடம் ஏற்படலாம்.  இவற்றுள் உத்தம புருஷர்கள் எனப்படும் உயர்ந்த மனிதர்களிடம் உறக்கம் மட்டும் தோன்றும். இடைநிலை மனிதர்களுக்கு மதுவின் விளைவாக பாடலும் சிரிப்பு ம்  எழும். ஆனால் கடைநிலை மனிதர்களுக்கு அழுகையும் மிகைப்பேச்சும் மதுவின் விளைவாகத் தோன்றும். பல கலைச் சொற்களுக்கு இப்படி விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. 
தமிழில் இப்படிப்பட்ட ஒரு தரவு நூல் இருந்தால் எவ்வளவோ நன்றாக இருக்கும். 
அகராதியின் பின்னிணைப்புகளாக வடமொழியில் வெளிவந்த கவிதையியல் நூல்களின் பதிப்பு விவரங்கள் முதலில் கொடுக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து கன்னட மொழியில் வெளிவந்துள்ள அணி இலக்கண நூல்கள், வடமொழியிலிருந்து  கன்னடத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள வடமொழிக்  கவிதையியல் நூல்களின் விவரங்கள்  ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன. மூன்றாவதாக கவிதையியல் குறித்து கன்னட மொழியில் வெளிவந்துள்ள கட்டுரைகள் பற்றிய தகவல்கள் இடம்பஎற்றுள்ளன. இந்த நூலை நான் வாசிக்க உதவிய என் அன்பிற்குரிய    திராவிடப் பல்கலைக்கழக முதுகலை மாணவர்கள் தே. அஜித், மு. பன்னீர்செல்வம், பி. சக்தி சுப்பிரமணியம்நாயக், வீ. பாரதிராஜா, ம.ஜீவா ஆகியோருக்கு என் அன்பு எப்போதும் உண்டு. 
அகராதி படித்த பிறகு தெளிவு பிறந்திருக்கிறதா என்று கேட்டால், இந்தியக் கவிதையியல்  பற்றி பேசவும் எழுதவும் சிறிது தைரியம் வந்திருக்கிறது என்று   சொல்வேன் ஒரு மெல்லிய வெளிச்சம் தூரத்தில் தெரிகிறது. . எனக்குரிய ஒரு பாடத்திட்டத்தை உருவாக்கிக் கொள்ள முடியும் என்று தோன்றுகிறது. அகராதியை மொத்தமாகப் படிக்கும் என்னைப்பற்றி 
 நினைக்க  எனக்கே கொஞ்சம் வேடிக்கையாகத் தான் இருக்கிறது, ஆனால் ரொம்ப சந்தோஷமாகவும் இருக்கிறது! 

Comments

Popular posts from this blog

ஒரு மொழி பெயர்ப்பாளர் பிறந்திருக்கிறார்

இவருக்கு எத்தனை கரங்கள்?

தலையாலே தான் தருதலால்