25

நான்கு மாதங்களுக்கு முன்பு எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு. கூப்பிட்டவர் என் தோழி. ஜெ.  சுடர்விழி. சென்னை கிறித்துவக் கல்லூரி தமிழ்த்துறையில் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். அவரும் நானும் கல்லூரியில் ஒன்றாகப் படித்தோம். 
எதிர்பாராத பொழுதில் அவர் அழைத்திருந்தது ஓர் ஆச்சரியம் என்றால்,  அவர் சொன்ன ஒரு தகவல் இன்னொரு ஆச்சரியம், அல்லது அதிர்ச்சி. 
நாங்கள் இளங்கலை முடித்து 25 ஆண்டுகள் நிறைவடைந்ததை  அவர்  சுட்டிக் காட்டினார். உடனே எம்சிசி தமிழ் 95- 98 என்ற பெயரில் ஒரு வாட்ஸ் அப் குழு உருவாக்கப்பட்டது. உடன் படித்தவர்கள் ஒவ்வொருவராக வந்து சேரத் தொடங்கினார்கள். அதன் பிறகு எம் சி சி 95 98 ரியூனியன் என்று இன்னொரு வாட்ஸ் அப் குழு வேறு. 
செப்டம்பர் 9 சென்னை கிறித்துவக் கல்லூரியில் சந்திக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. கண்டிப்பாக வரத்தான்  வேண்டுமா  என்றிருந்தவனை மிரட்டி வரவழைத்து விட்டார்கள்.  நாங்கள் கேட்டுக்கொள்ள எங்களுக்கு பாடம் நடத்திய ஆசிரியர்களுள் சிலர் வருகை தர இசைந்தார்கள். 
82 வயதான பேராசிரியர் தி. இராஜகோபாலன் அவர்கள் நான் தாமதமாக சென்ற போது  முதல் வரிசையில் அமர்ந்திருந்தார். பேராசிரியர் மோசஸ் மைக்கேல் ஃபேரடே , பேராசிரியர் கு. அரசேந்திரன், பேராசிரியர் யோ. ஞானச்சந்திர ஜான்சன்(  கிறித்துவக் கீர்த்தனைகள் தொடர்பான இவருடைய ஆய்வுகள் குறித்து எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் இணையதளத்தில் கட்டுரைகள் உள்ளன). , பேராசிரியர் பவுலின் ஜெயலட்சுமி,  பேராசிரியர் டேவிட் பிரபாகர், பேராசிரியர் ந இளங்கோ மற்றும் பேராசிரியர் பால்பிரபு சாந்தராஜ் ஆகியோர் வந்திருந்தார்கள். மேடையில் ஒவ்வொரு துறை சார்பிலும் பேராசிரியர்கள் அழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்கள்.  நாங்கள் இவர்களிடம் எல்லாம் படித்திருக்கிறோம். 
எங்களுக்கு பாடம் நடத்திய பிற துறை பேராசிரியர்கள் குறிப்பாக ஆங்கிலத் துறையைச் சேர்ந்த பேராசிரியர்கள் நிர்மல் செல்வமணி, கணேஷ் மற்றும் பேராசிரியர் ஸ்டீபன் போன்றவர்களும் வந்திருந்தார்கள். 
சென்னை கிறித்துவக் கல்லூரி பொதுவாக  அசைவ உணவுகளுக்குப் பெயர் பெற்றது. ஆனால் சைவ உணவும் எதிர்பார்த்திருக்காத அளவு சுவையாக இருந்தது. 
சாப்பிட்டு முடித்து துறைக்குச் சென்று ஆசிரியர்களுடன் பேசிக் கொண்டிருந்தோம். எங்களுக்கு சில ஆண்டுகள் இளையவர் முத்துக் கந்தன் தமிழ்த்துறையில் பேராசிரியராக பணியாற்றுகிறார்.அல் நேர்கோட்டு எழுத்துக்களில் ஆர்வமுடையவர் நாங்கள் சென்றபோது அவரும் துறையில் இருந்தார், அவருடனும் பேசிக் கொண்டிருந்தோம். 
அதன் பிறகு இரவு 9 மணி வரை கலை நிகழ்ச்சிகள். பள்ளியிலும் கல்லூரியிலும் என்னுடன் ஒன்றாகப் படித்த ராஜேந்திரன் நன்றாகவே பாடினான். 
கல்லூரிக் காலத்தில் என்னுடன்  அதிகம்  பழகியிருக்காத நண்பர்கள் என்னிடம் வந்து தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு பேசினார்கள்.  தமிழ்த் துறை சார்பில் ஆறு மாணவர்கள் மற்றும் ஜெகதீஸ்வரி என்ற ஒரே ஒரு மாணவி. எங்களுடன் படித்த ஜெகதீஸ்வரி மகனை  கூட்டிக்கொண்டு வந்திருந்தாள்.  
மஸ்கட் உள்ளிட்ட வெளிநாட்டு நகரங்களிலிருந்தெல்லாம் நண்பர்கள் வந்திருந்தார்கள் ஆமாம், இதற்காக மட்டும்தான். 
 சிலர் என் பெயரை நினைவு வைத்துக் கொண்டு தாங்களே அறிமுகப்படுத்திக் கொண்டு பேசினார்கள்.  
25 வருடங்களுக்கு முற்பட்ட சினிமா பாடல்களை பார்த்துத்தேர்ந்தெடுத்து கொண்டு வந்திருந்தார்கள். அவற்றை ஸ்பீக்கரில் ஒலிக்கச் செய்தபோது நாங்கள்   எளிதில் வேறொரு உலகிற்குச் சென்று விட்டோம்.  
குறிப்பாக எங்கள் காலத்தில் புகழ்பெற்றிருந்த முஸ்தபா முஸ்தபா, அரபிக் கடலோரம் இந்த வகை பாடல்கள். 
எங்கள் கல்லூரியில் புகழ்ப்பெற்ற கிரேப் ஜூஸ் பரிமாறப்பட்டது. (திராட்சை ரசம் என்றால்  திராட்சை ரசம் தான். யாரும் அதனை குறியீடாக எல்லாம் எடுத்துக் கொள்ள வேண்டாம். )
எங்கள் தோழி ஜூலியட் ( ஆங்கிலத் துறையில் படித்தவர்) எங்களையெல்லாம் ஒருங்கிணைக்க சில மாதங்களாக கடுமையாக முயன்றார். நன்றி ஜூலியட். இரவிலும் கல்லூரியிலேயே சாப்பாடு. 
என்னுடன் படித்த மோகனசுந்தரம் இன்று சிறிய அளவில் வியாபாரம் செய்கிறான். தாம்பரத்தில் அலுவலகம் அமைத்திருக்கிறான். அந்த அலுவலகத்தைச் சென்று  பார்த்து விட்டு வந்தோம். 
நிகழ்ச்சி முடிக்கும் போது நண்பர்கள்  நாம் பொன்விழா கொண்டாட வேண்டும் என்றார்கள் . 
கனவுகள் ,கனவுகள் , கனவுகள்! 

Comments

Post a Comment

Popular posts from this blog

ஒரு மொழி பெயர்ப்பாளர் பிறந்திருக்கிறார்

இவருக்கு எத்தனை கரங்கள்?

தலையாலே தான் தருதலால்