அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்

ஆகஸ்ட் 5ஆம் தேதி இரவு 7 மணிக்கு நான் ஈரோட்டில் இறங்கினேன் நண்பர் பாரி ஈரோட்டில் வந்து என்னை அழையுங்கள் அண்ணா என்று வாட்ஸ் அப் செய்தி அனுப்பி இருந்தார் அதற்குத் தேவை இருக்கவில்லை ரெட் டாக்ஸி சேவை சிறப்பாக அமைந்தது கவுண்டச்சி பாளையத்தில் உள்ள கல்யாண மண்டபத்தை நான் அடையும்போது வாசலில் நூற்பு  சிவகுருநாதன் அவர்களின் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தார்கள். என்னை பார்த்தவுடன் நண்பர் சிவகுருநாதன் வந்து அழைத்துச் சென்றார். 
மாடிக்கு செல்லும்போது பேராசிரியர் இளங்கோவன் அவர்களின் சந்திப்பு நடந்து கொண்டிருந்தது. குடந்தை சுந்தரேசனார் குரலை தாம் ஆவணப்படுத்திய அனுபவத்தை பேராசிரியர் பகிர்ந்து கொண்டிருந்தார். நிகழ்ச்சி முடித்து இரவு உணவு சாப்பிட்டோம். 
நண்பர்களுடன் நான் நின்று யோகம் பேசிக் கொண்டிருந்தபோது அங்கு வந்த எழுத்தாளர் ஜெயமோகன் அன்புடன் என் கையைப் பிடித்துக் கொண்டார். குருகு இணைய இதழின் ஆசிரியர் நண்பர் அநங்கன் அவர்களுடன் தீ நம் ஸ்ரீ கண்ட அய்யா அவர்களின் இந்திய கவிதையியல் நூல் பற்றி பேசிக் கொண்டிருந்தேன்.  அவரும் சிவகுருநாதனின் குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டே என்னுடன் பேசிக் கொண்டிருந்தார். புதுவை தாமரைக் கண்ணனும் எங்களுடன் சேர்ந்து கொண்டார். 
இரவு என்னுடன் நண்பர்  அவிநாசி தாமரைக் கண்ணனும் இணைந்து கொண்டார். இரவு 10 மணிக்குப் பிறகு எல்லா விஷ்ணுபுரம் இலக்கிய சந்திப்புகளிலும் நடப்பது போல எழுத்தாளர் ஜெயமோகனை சுற்றி உட்கார்ந்து கொண்டு பொதுவாக பேசிக் கொண்டிருக்கும் வழக்கம் ஈரோட்டிலும் இரண்டு நாட்கள் தவறாமல் நடைபெற்றது. 
நண்பர்களுடன் எல்லா விஷயங்களைப் பற்றியும் பொதுவாக பேசிக் கொண்டிருப்பதில் அப்போது கூட அதை ஒரு அரட்டை நிகழ்ச்சியாக மாற்றாமல் ஒரு வகுப்பாக மாற்றுவதில்  எழுத்தாளர் ஜெயமோகனுக்கு நிகர் அவர்தான். 
ஆறாம் தேதி காலை என் அறையிலேயே தேனீர் கொண்டு வந்து கொடுத்தார்கள். நான் தயாராகி கீழே காலை உணவுக்கு சென்றபோது அங்கு என் அன்பிற்குரிய நண்பர்கள் காளிப் பிரசாத் ன, ஜா. இராஜகோபாலன் ஆகியோரை சந்தித்தேன். 
நிகழ்ச்சி ஆரம்பமாவதற்குள் மேலே சென்று விடுவது எனக்கும் நண்பர் கமலநாதனுக்கும் வழக்கம். 
எப்போதும் போல சரியான நேரத்தில் இந்த முறையும் நிகழ்ச்சி தொடங்கியது. பேராசிரியர் இளங்கோவன் அவர்களே ஒரு நாட்டுப்புறப் பாடலை பாடி நிகழ்ச்சியைத்தொடங்கி வைத்தார். 
மலையாளத் திறனாய்வாளர் ராஜசேகரன் அவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி முதலில் நடைபெற்றது. அதன் பிறகு பேராசிரியர் இளங்கோவன் அவர்களுடனான கலந்துரையாடல். 
மரபார்ந்த முறையில் தமிழ் கற்ற ஒருவர் நவீன இலக்கியத்தை கற்பிக்கும் போது எதிர்கொள்ளும் சவால்கள், தமிழ் ஆய்வு தரம் குறைந்து வருகிறது என்று சொல்லப்படும் குற்றச்சாட்டு இவை பற்றி எல்லாம் நான் அரங்கில் அவரிடம் வினா எழுப்பினேன். நண்பர் புதுவை தாமரைக்கண்ணன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். 
அதன் பிறகு திரு தியோடோர் பாஸ்கரன் அவர்களுடனான    கலந்துரையாடல். அறிஞரின் பெயரை பிழையில்லாமல் எழுதி இருப்பேன் என்று நம்புகிறேன். பேராசிரியர் லோகமாதேவி அவர்கள் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். 
மதிய உணவு மிகச்சுவையாக இருந்தது. நண்பர்களின் அன்பான உபசரிப்பு உணவின் சுவையை மேலும் அதிகரித்தது. உணவுக்குப் பிறகு நாதஸ்வரக்கச்சேரி  ஆரம்பமானது. இசைக்கப்படும் பாடல்களை முன்பே கேட்டு வந்திருந்ததால் இசையில் ஈடுபட முடிந்தது. நண்பர் யோகேஸ்வரனின் தந்தை திரு ராமநாதன் அவர்கள் கச்சேரியில் பங்கேற்றார். அப்பாவை அறிமுகம் செய்து வைக்கிறேன் என்று சொன்ன  , யோகேஸ்வரன் நான் முன்வரிசையிலேயே உட்கார வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். எனக்கு பின்னால் எழுத்தாளர் ரம்யா அவர்கள் உட்கார்ந்து இருந்தார்கள். அவருடன் நண்பர் திரு கடலூர் சீனு. ரம்யா உடன் இப்போது தான் பேச அமைந்தது. பழம்பெரும் நடிகை பாலாமணி குறித்து அவர் எழுதிய சிறுகதை பற்றிய என் பாராட்டுதல்களை பகிர்ந்து கொண்டேன். மாலை விருது வழங்கும் நிகழ்ச்சி வழக்கம் போல சிறப்பாகவே நடைபெற்றது. 
நிகழ்ச்சி முடித்து பொதுவாக இரவு வேளையில்  புறப்பட்டு விடுவது என் வழக்கம். ஆனால் இந்த முறை அப்படிச் செய்யவில்லை. 
எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் ஆறாம் தேதியும் அவை கூட்டினார்
 தேமா புளிமா என்று வாய்ப்பாடு படித்து யாப்பு கற்றுக் கொள்வது கடினம் தான் என்று அவர் சொல்லிக் கொண்டிருந்ததை ஆமோதிக்கத்தான் வேண்டும். ஏனென்றால் என்னால் இன்று வரை ஒரு வெண்பா கூட எழுத முடியவில்லை. 
காலை ஐந்து பத்துக்கு அலாரம் வைத்து எழுந்தேன். இரவு ஒரு மணி வரை அவிநாசி தாமரைக்கண்ணனுடன் பேசிக் கொண்டிருந்தேன். சொன்ன நேரத்தில் சரியாக கார் வந்தது சந்தோஷமாக இருந்தது. நண்பர்கள் பாரி அந்தியூர் மணி ஆகியோரிடம் நான் அலைபேசியில் விடை பெற்றுக் கொண்டேன். 
மணமகன் அறை எனக்கு ஒதுக்கப்பட்டு இருந்தது. நான் சிரமப்படக்கூடாது என்று அந்த அளவுக்கு அக்கறை எடுத்துக் கொள்கிறார்கள் நண்பர்கள். என்னை எங்கும் எப்போதும் வரிசையில் நிற்க விடாமல் ஒவ்வொரு விஷ்ணுபுரம் விழாவிலும் ஒரு குழந்தையைப் போல கவனித்துக் கொள்கிறார்கள். அப்படி இவர்களுக்கு நான் என்ன செய்து விட்டேன?  இலக்கியத்துக்கு உண்மையாக இருப்பததைத்  தவிர்த்து வேற என்ன செய்யப் போகிறேன்?  டிசம்பர் மாத விஷ்ணுபுரம் விழாவிலும் அதன் பிறகு நடைபெறவிருக்கும் மற்ற விழாக்களிலும் நான் கலந்து கொண்டு ஒரு கட்டுரை எழுதினால் அதில் பெயர்கள் மாறுமே தவிர செய்தி மாறப் போவதில்லை என்பதை இப்போதே சொல்லி விடுகிறேன்.  அனைத்திற்கும் நன்றி நண்பர்களே! 

Comments

Popular posts from this blog

ஒரு மொழி பெயர்ப்பாளர் பிறந்திருக்கிறார்

இவருக்கு எத்தனை கரங்கள்?

தலையாலே தான் தருதலால்