பத்தும் ஐந்தும் ஒரு பகலன்றோ!

நண்பர் பசவராஜ ஐயப்ப கோடகுண்டி குல்பர்கா மத்தியப்பல்கலைக்கழகத்தில்  கன்னடத்துறையில் பேராசிரியராகப்  பணியாற்றுகிறார். 2005ம் ஆண்டு நான்  திராவிடப் பல்கலைக்கழகத்தில்  பணிக்குச்சேர்ந்தபோது நண்பர் கன்னடத்துறையில் பணிக்குச் சேர்ந்திருந்தார்.  பிறகு கர்நாடக மாநிலத்தில்லுள்ள மத்தியப்  பல்கலைக்கழகத்தில் பணியில் சேர்ந்தார். பசவராஜ் அடிப்படையில் ஒரு மொழியியல் ஆய்வாளர். ஆனால் அவரை அப்படி ஒரு துறையுடன் வரையறுத்து நிறுத்துவதும் கடினம். அண்மையில் அக்கமகாதேவி குறித்து புத்தகம் எழுதியிருக்கிறார். ராமச்சந்திர பேந்தரே பற்றியும் இன்னொரு புத்தகம். 
 நீங்களே சொல்லுங்கள்? இப்படிப்பட்டவர்களை ஒரு துறையுடன் எப்படிப் பொருத்துவது? 
திராவிடப் பல்கலைக்கழக கன்னடத்துறையின் பாடத்திட்ட வரையறைக் குழு கூட்டம் ஆகஸ்ட் மூன்றாம் தேதி நடைபெற்றது. அதில் பங்கேற்க பசவராஜ் வந்திருந்தார். 
கூட்டம் முடித்து இரவு நமது வீட்டில் சாப்பிட்டார். கன்னடத்  தமிழ் அகராதி ஒன்றை உருவாக்க அடிப்படைப் பணிகளை நாங்கள் இரண்டு பேரும் சேர்ந்து 15 ஆண்டுகளுக்கு முன்பு திட்டமிட்டுச் செய்தது  பற்றி எல்லாம் பேச்சு சென்று கொண்டிருந்தது. 
அவர் வீட்டுக்கு வந்து ஜோதியையும் குழந்தைகளையும் சந்தித்தது எனக்கு நிறைவாக இருந்தது. 
அவர் இங்கிருந்து குல்பர்கா சென்று  14 அல்லது 15 வருடங்கள் இருக்கும். இருந்தாலும் எங்கள் உறவு அப்படியே தொடர்கிறது. 
எனது மொழிபெயர்ப்புப் பணிகளில் பசவராஜின் பங்களிப்பு உண்டு. 
இந்தியக்கவிதையியல் தொடர்பான புத்தகங்களை எனக்காக வாங்கிக் கொடுத்தவரும் நண்பர் தான். 
பசவராஜ் ஒரு முதன்மையான அறிவாளுமை. என் நண்பர் என்பதால் மிகைப்படுத்திச் சொல்லவில்லை. அண்மையில் வெளிவந்த ஆக்ஸ்போர்ட் அகராதி ஒன்றின் பதிப்புப் பணியில் உயர் பொறுப்பில் இருந்தார். 
ஒரு மணி நேரம் அவருடன் பேசினால் 59 நிமிடங்கள் வரலாறு,  இலக்கியம்,  மொழி , தத்துவம் என்று இல்லாமல் வேறொன்றும் பேச மாட்டார். . ஆகஸ்ட் 4ம் தேதி திராவிட மொழிகளில் பால் மற்றும் எண் என்ற பொருளில் கன்னடத்துறையில் ஓர் உரை வழங்கினார். மிகச் சிறப்பாக இடைவிடாமல் மாணவர்களின் மனம் ஏற்றுக் கொள்ளுமாறு பேச முடிவது சிறப்பு. அது பசவராஜுக்கு அமைகிறது. 
மாலை குப்பம் ஸ்டேஷனில் வழியனுப்பி வைத்தேன். தழுவிக் கொண்டோம். அதே ரயில்வே ஸ்டேஷன். இப்படித்தான் நண்பரை  பதினைந்து வருடங்களுக்கு முன்பு மனம் மகிழ்ந்து தழுவி  குல்பர்காவுக்கு அனுப்பி வைத்தேன். அப்போது எங்களுடன் ஹேமானந்தா என்ற இன்னொரு நண்பரும் இருந்தார் ‌‌ அவரும் மொழியியலாளர்தான். அவர் இப்போது டெல்லியில் இருக்கிறார். 
15 வருடங்கள் தானே? 
என்ன பெரிதாய் மாறிவிடப் போகிறது?   
காட்டுக்குச் செல்லும் ராமன் கோசலையைப்  பார்த்து 
எத்தனைக்கு உள ஆண்டுகள் 
பத்தும் நாலும் ஒரு பகல் அன்றோ?  என்பான். 
 நானும் பசவராஜும்  வேண்டுமென்றால்  
பத்தும்  ஐந்துஒரு பகல் அன்றோ என்று சொல்லிக் கொள்ளலாம்! 

Comments

Popular posts from this blog

ஒரு மொழி பெயர்ப்பாளர் பிறந்திருக்கிறார்

இவருக்கு எத்தனை கரங்கள்?

தலையாலே தான் தருதலால்