23

23 
இந்த மாதம் 23ம் தேதி  இரண்டு நல்ல விஷயங்கள் நடந்தன. முதலாவது விஷயம் பற்றி ஊரே பேசிக் கொண்டிருக்கிறது. 24 ஆம் தேதி ஆட்டோவில் வரும்போது என்னால் ராட்டினம் கூட ஏற முடியாது நிலவை தொட்டு விட்டார்களே என்று இரண்டு பெண்கள் பேசிக் கொண்டு வந்ததை என் காதுகளால் கேட்டேன். கட்டற்ற நுகர்வு இந்தப் பிரபஞ்சத்தையே பெரிய சந்தை  என நினைக்கும் மனநிலை, இவை எனக்கு உடன்பாடில்லை. வியாபாரத்தைத் தவிரவும் இந்த வாழ்க்கையில் சில இன்பங்கள் இருக்கின்றன என்று நம்புகிறேன்.
 இருந்தாலும் மானுட வல்லமை மீது இது போன்ற தருணங்களில் நம்பிக்கை அதிகரிக்கிறது. ஒரு காலத்திய கொள்ளை நோய்கள் இன்று சில மாத்திரைகளில்  குணமடைகின்றன. எனவே மானுடன் தனது எல்லைகளை முயன்று கடக்கும் போது சந்தோஷப்படாமல் இருக்க முடிவதில்லை. மனிதனுக்கு நிலவிலும் பிற கோள்களிலும் என்னென்ன பரிசுகள் மற்றும் சவால்கள் காத்திருக்கின்றனவோ இனிமேல் தான்  தெரியவரும். 
இனி இரண்டாவது விஷயம். 
ஆகஸ்ட் 23 அன்று நமது திராவிடப் பல்கலைக்கழக தமிழ்த்துறை சார்பில் நடத்தப்படும் புதன் வட்ட நிகழ்வில் நமது பல்கலைக்கழக ஆய்வு மாணவர் திரு சண்முக விமல் குமார் (எழுத்தாளர் றாம்சந்தோஷ்)  திணைக்  கோட்பாட்டின் வரலாற்று வளர்ச்சி பற்றி கட்டுரை வழங்கினார்
விமலுக்கு அறிமுகம் தேவையில்லை. போதும் போதும் என்று சொல்லும் அளவுக்கு  அது அவருக்கு இருக்கிறது.  அவர் மொழி பெயர்த்த ஒரு தெலுங்குச் சிறுகதை சென்ற மாதம் கூட நீலம்  இதழில் வெளிவந்தது, அதற்கு  முன்பு இந்து தமிழ் திசை இதழில் நூலொன்றை அறிமுகப்படுத்தியிருந்தார். 
கவிஞர், மொழிபெயர்ப்பாளர், ஆய்வாளர் என பல முகங்கள் அவருக்கு.  இலக்கியம் ஒரு நாளும் அவரைக் கைவிடாது. அதைவிட இன்னொன்றும் அவரிடம்  இருக்கிறது. ஒளியென அவர் முன் செல்கிறது,காற்றென அவருள் நிறைந்திருக்கிறது,நிழலென அவரைச் சூழ்ந்திருக்கிறது.
  அது எது? நான் சொல்லக்கூடாது.  நீங்கள் நெருங்கி பழகினால் உங்களுக்கு அது என்ன என்று கண்டிப்பாகத் தெரியவரும். அப்போது நீங்களும் சொல்ல மாட்டீர்கள். காரணம் விளக்க விளக்க விலகிச் செல்லும் இயல்பு அதனுடையது. 
விமல் போன்றவர்களை ஏற்றுக் கொண்டு நிறுவனங்கள்  தங்கள் சிறப்பை அதிகப்படுத்திக் கொள்ளலாம். 
விமலுடைய அறை ரொம்ப அழகானது. அவர் இருக்கும் அறையே ஒரு நூலகம், அல்லது  கலைக்கூடம். 
 விமலுக்கு 
தாயம் விழ வேண்டும், விழும்!  ஏனென்றால்  பன்னிரண்டைத்  தவிர  வேறொன்றையும் பார்த்தரியாதவை அவர் பகடைகள்!  

Comments

Popular posts from this blog

ஒரு மொழி பெயர்ப்பாளர் பிறந்திருக்கிறார்

இவருக்கு எத்தனை கரங்கள்?

தலையாலே தான் தருதலால்