தர்கா தேவாலயம் ஆலயம் - இனிமை நிறைந்த இரண்டு நாட்கள்

சில ஆண்டுகளுக்கு முன்பு அப்பா இறுதிக் கட்டத்தில் இருந்தபோது  நடந்தது இது. அப்போது எதிர்பாராமல்  நாகூருக்குப் பயணம்.  அப்பாவுக்காக ஒரு பூட்டு வாங்கி,     அங்கிருக்கும் கதவு ஒன்றில்  பூட்டிவிட்டால் அவரது கஷ்டங்கள் குறையும் என்று சொன்னார்கள். அப்படியே செய்தேன். 
சின்ன வயதில் பரமக்குடியில் நான் படித்துக் கொண்டிருந்தபோது  ஏர்வாடி தர்காவுக்கு அழைத்துச் சென்றார்கள்.  அதிகாலைப் பொழுதில் என் பிரியத்துக்குரிய மும்தாஜ் டீச்சர் பாத்தியா ஓதியதும் அராபிய மந்திரங்களைக் கேட்டதும்  நேற்று நடந்தது போல இருக்கிறது.  
சில வருடங்களுக்கு முன்பு பணி வாழ்வில் ஏற்பட்ட சிக்கல்களின் விளைவாக நாகூருக்கு செல்லும் எண்ணம் எனக்குள் தோன்றியதா, இல்லை நண்பர்கள் சொன்னார்களா சரியாக நினைவில்லை. 
இரண்டு முறை திட்டமிட்டோம். ஒருமுறை பெருமழை, மற்றொரு முறை வேறு ஏதோ சிக்கல்.  இதற்கிடையே, சாரு நிவேதிதா நாகூர் காரர் என்பதும் அந்த ஊர்  மீதான மோகத்துக்குக்  கூடுதல் காரணம். 
ஜூலை 15ஆம் தேதி துறையில் ஒரு முனைவர் பட்ட வாய்மொழித் தேர்வு முடித்து பேசிக் கொண்டிருந்த எங்களுக்குப்  புறப்படலாம் என்று தோன்றிவிட்டது. 
நண்பர்கள் மாரியப்பன்,  கணேஷ் மூர்த்தி, ராஜவேலு அப்புறம் நான். காவேரிப்பட்டினத்தில் ஒரு தள்ளுவண்டிக் கடையில் சாப்பிட்டோம். பொதுவாக இது போன்ற பயணங்களில் பளபளக்கும் உணவகங்களைவிட  எளிய இடங்களில் சாப்பிடுவது நல்லது என்ற   எண்ணம் இரண்டு நாட்களும் பொய்க்கவில்லை. 
சேலம் திருச்சி என  நிறுத்தி நிறுத்தி தேநீர் குடித்துக் கொண்டே போனோம்.   காவிரிப் பாலத்தில் பயணம் செய்யும்போது வீட்டுக்குச்  செய்தி அனுப்பினேன். தஞ்சாவூர் கடந்து முதலில் சிக்கல் சென்று சிங்காரவேலனைப் பார்க்க வேண்டும் என்பது திட்டம். வேறொன்றுமில்லை அங்கு எங்கள் மாணவியின் வீடு இருக்கிறது. போனில் கேட்டதற்கு தானும் ஓசூரிலிருந்து வீட்டுக்கு வந்து கொண்டிருப்பதாக சொன்னாள்.  அவளுடைய  அப்பாவே வந்து அழைத்துச் சென்றார். ஒரு மணி நேர ஓய்வுக்குப் பிறகு அங்கு காலை உணவு. 
நாகூருக்குப் போவதற்கு  முன்பே நாகூர் பூந்தி சாப்பிட்டு விட்டோம். எங்கள் மாணவியின் அப்பா ,தம்பி உட்பட நாங்களும்  முதலில் சிங்காரவேலனை தரிசித்தோம். ஒரு வாரத்துக்கு முன்புதான் கும்பாபிஷேகம் நடந்தது என்கிறார்கள். அதனால் தானோ  கோயிலுக்குப் பக்கத்தில் அசுத்தம் அப்பிக் கிடந்தது.  நாற்றம் மூக்கை  அடைத்தது. நமக்குப் பரவாயில்லை,  பாவம் சிங்காரவேலன் எப்படித்தான் பொறுத்துக்கொள்கிறானோ? 
நாகூர் செல்லும்  வழியில் அக்கரைப்பேட்டையில் நண்பர்கள் கருவாடு வாங்கினார்கள். காருக்குள் உட்கார்ந்து கொண்டு   அவர்கள் விலை பேசுவதைக்  கேட்டுக்கொண்டிருந்தேன். 
நண்பர் சாகுல் ஹமீதுக்கு நன்கு அறிமுகமான செந்தில் ,நாகூரில் கடை வைத்திருக்கிறார். சாகுல்  சொல்லித்  தொலைபேசியில் பேசினேன். நாகூரில் காத்திருந்து அழைத்துச் சென்றார். 
தர்காவில் நல்ல தரிசனம் அமைந்தது. மயிலிறகால் எங்களை வருடி பிரார்த்தனை செய்தார்கள். கண்ணுக்குத் தெரிபவர்கள் எல்லாம் செந்திலுக்கு  நண்பர்கள். 
செந்திலுடன் பேசிக்கொண்டிருந்துவிட்டு அங்கிருந்து வேளாங்கண்ணி செல்லும் திட்டம். 
வழியில் கோரக்கர் சமாதி இருக்கிறது என்று அறிந்து  அங்கும் சென்றுவரலாம் என்று முடிவுசெய்தோம்.  
கோரக்கர்  ஜீவ சமாதியைச் சுற்றி எழுப்பப்பட்ட கோயிலில் இவ்வளவு கூட்டம் இருக்கும் என்று எதிர்பார்த்திருக்கவில்லை. மதிய வேளை என்பதால் அங்கேயே சாப்பிட்டோம்.  எளிய உணவுதான் என்றாலும் நிறைவாக சாப்பிட்டோம்.
‌ அதன் பிறகு வேளாங்கண்ணி பேராலயம். மெழுகுவர்த்திகளை வாங்கி காணிக்கை செலுத்தி பிரார்த்தித்துக் கொண்டேன்.  கல்யணராமன் வெளியிட்ட ஆரஞ்சாயணம் தொகுப்பில் ஒரு தேவாலய வாசலில் பிராத்தனை செய்யும் கிழவரைப் பற்றி எழுதியிருப்பார். பல வருடங்களுக்கு முன்பு செய்த ஒரு துரோகத்துக்காக அவர் கண்ணீர்விட்டு பிராத்தனை செய்வார். . 
நண்பர்கள் அன்னையின் திருவுருவப்படம்  உள்ளிட்ட நினைவுப் பொருள்களை வாங்கினார்கள். ஞாயிற்றுக்கிழமை என்பதால் கூட்டம் அலைமோதியது. 
சிக்கலை விட, நாகூரை விட, வேளாங்கண்ணி சுத்தமாக இருக்கிறது என்பது ராஜவேலுவின் கண்டுபிடிப்பு. அவர் உறுதியான விசுவாசி.  கடற்கரைக்கு சென்றே ஆக வேண்டும் என்று ராஜவேலு அடம்பிடித்தார். கடற்கரைக்கு நடந்து சென்றதை விட நாங்கள்  நடந்தே  குப்பத்திற்கு திரும்பியிருக்கலாம். 
தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணை வேந்தர் பேராசிரியர் பாலசுப்ரமணியன் பல ஆண்டுகள் குப்பத்தில் பணியாற்றினார்.  பட்டுக்கோட்டையில் இருக்கும் அவரை சென்று பார்க்கலாம் என்று நினைத்து புறப்பட்ட எங்களை  ஒரு வழியாக கூகுள் வரைபடம் கொண்டு சேர்த்தது..  பட்டுக்கோட்டையில் ஒரு அழகான வீடு கட்டி பேராசிரியர் குடும்பத்துடன் குடியிருக்கிறார். நூலகம் மாடித்தோட்டம் எல்லாம் பார்த்தோம். 
சாகித்ய அகாடெமி வெளியிட்ட அமைப்பியல்  பின்னமைப்பியல் கீழைதேயக் காவியவியல் என்ற புத்தகத்தை ஆசை ஆசையாக வாங்கி இருந்தேன். அந்தப் புத்தகம் ரொம்ப நாட்களுக்கு முன்பே பேராசிரியரிடம் சென்று விட்டது. அதை அவர் மறக்காமல்  திருப்பிக் கொடுத்தார்.. எனக்கு ஏற்பட்ட சந்தோஷத்துக்கு அளவில்லை.  எப்படி அதை இதுவரை மறந்திருந்தேன்?  
அங்கிருந்து தஞ்சாவூர் திருச்சி வழியாக திரும்பிக் கொண்டிருந்தோம். பெயர் இல்லாத ஒரு உணவகத்தில் சாப்பிட்டோம். முதல் நாள் இரவு அடுத்த நாள் இரவு என இரண்டு நாள் தொடர் பயணம் காரணமாக தேரோட்டுவதில் கலியுகக் கண்ணன் என்றே ஜமாவில் பேர் வாங்கிய  மாரியப்பனும் களைத்துவிட்டார். எனவே காரை நிறுத்தி நிறுத்தி ஓய்வெடுத்து பயணத்தை தொடர்ந்தோம். இப்படி இரண்டு இரவுகள் தொடர் பயணம் எல்லாம் நல்லதற்கல்ல என்று தாராளமாக அறிவுரை  சொல்வேன். 
எங்களுக்கு ஏற்படும் நெருக்கடிகளை அல்லாஹ்வின் ஆலோசனைப்படி தேவன் போட்டுக் கொடுத்த பாதையில் மயிலேறி வந்து  சிங்காரவேலன்   தீர்த்து வைப்பான்  என்பதை சந்தேகிக்கும்  அவிசுவாசிகளையும், காஃபீர்களையும் நாத்தீகர்களையும்  பொருட்படுத்துவதாக இல்லை. 
தமிழில் பயணங்ளுக்காக வழி என்ற இணைய இதழ் வெளிவருகிறது. எனக்குத்தெரிந்து பல நண்பர்கள் மாபெரும் பயணிகள். அவர்களைப் பார்க்கும் போதெல்லாம் ஆற்றாமை எழுவதை தடுக்க முடிவதில்லை. 
கர்நாடகப் பயணத்தின் போது இரவில் பார்க்க முடிந்த ஆகும்பே காட்டின் அடி மரங்கள், சின்ன வயதில் கண்களுக்குப்  புகையாகத் தெரிந்த குற்றால அருவி இவற்றின்  வரிசையில் இந்த பயண காட்சிகளும்  இடம்பெறக்கூடும். 

Comments

Post a Comment

Popular posts from this blog

ஒரு மொழி பெயர்ப்பாளர் பிறந்திருக்கிறார்

இவருக்கு எத்தனை கரங்கள்?

தலையாலே தான் தருதலால்