அந்தக் கரம் அந்த மனம்
ஓர் ஊனமுற்ற குழந்தை மற்ற ஊனமுற்ற குழந்தைகளுடன் சேர்ந்து வளரும் போது அது தன்னுடைய ஊனத்தைக் குறித்து நன்கு புரிந்து கொள்வது மட்டுமல்ல அதனை சிறப்பாக எதிர்கொள்ளவும் விரைவாகக் கற்றுக் கொள்கிறது. இது ஒரு பொதுவான உண்மை. அப்படி இல்லாமல் அந்தக் குழந்தை பொதுச் சூழலில் தனித்து வளரும் என்றால் ஊனத்தை அது சரியாக கையாள தெரியாததன் காரணமாக மேலும் மேலும் உடல் சார்ந்த மனம் சார்ந்த வேதனைகளுக்கு உள்ளாகிறது. பரமக்குடியில் நான் ஊனமுற்ற குழந்தையாக தன்னந்தனியே தான் வளர்ந்தேன் பார்வையின்மை குறித்த விழிப்புணர்வு அந்த வயதில் எனக்கு போதுமானதாக இல்லாததால் பலவகை துன்பங்களுக்கு உள்ளானேன். எவ்வளவு சொன்னாலும் என்னால் மற்ற குழந்தைகளைப் போல தெருவில் விளையாட முடியாது என்பது எனக்குப் புரிந்ததே இல்லை . மற்ற குழந்தைகள் தெருவில் விளையாடும் போது அம்மாவின் பார்வையிலிருந்து தப்பித்து தெருவில் இறங்கிச் சென்று சாலையோர மின் கம்பங்களில் மோதிக் கொண்டு நெற்றி புடைக்க வீடு திரும்புவதும், தெரு நாய்களை மிதித்துவிட்டு அலறிக் கொண்டு ஓடி வருவதும் மிகச் சாதாரணமான நிகழ்வுகள். பட்டாசு ...