தர்கா தேவாலயம் ஆலயம் - இனிமை நிறைந்த இரண்டு நாட்கள்
சில ஆண்டுகளுக்கு முன்பு அப்பா இறுதிக் கட்டத்தில் இருந்தபோது நடந்தது இது. அப்போது எதிர்பாராமல் நாகூருக்குப் பயணம். அப்பாவுக்காக ஒரு பூட்டு வாங்கி, அங்கிருக்கும் கதவு ஒன்றில் பூட்டிவிட்டால் அவரது கஷ்டங்கள் குறையும் என்று சொன்னார்கள். அப்படியே செய்தேன். சின்ன வயதில் பரமக்குடியில் நான் படித்துக் கொண்டிருந்தபோது ஏர்வாடி தர்காவுக்கு அழைத்துச் சென்றார்கள். அதிகாலைப் பொழுதில் என் பிரியத்துக்குரிய மும்தாஜ் டீச்சர் பாத்தியா ஓதியதும் அராபிய மந்திரங்களைக் கேட்டதும் நேற்று நடந்தது போல இருக்கிறது. சில வருடங்களுக்கு முன்பு பணி வாழ்வில் ஏற்பட்ட சிக்கல்களின் விளைவாக நாகூருக்கு செல்லும் எண்ணம் எனக்குள் தோன்றியதா, இல்லை நண்பர்கள் சொன்னார்களா சரியாக நினைவில்லை. இரண்டு முறை திட்டமிட்டோம். ஒருமுறை பெருமழை, மற்றொரு முறை வேறு ஏதோ சிக்கல். இதற்கிடையே, சாரு நிவேதிதா நாகூர் காரர் என்பதும் அந்த ஊர் மீதான மோகத்துக்குக் கூடுதல் காரணம். ஜூலை 15ஆம் தேதி துறையில் ஒரு முனைவர் பட்ட வாய்மொழித் தேர்வு முடித்து பேசிக...